தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வழிவகை செய்யும் வகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையும் வழங்கப்பட உள்ளது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் விநியோகிக்கப்பட உள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர். மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான டோக்கன்கள் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைத்தால் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில், “ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கை ரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/