FIR Against Tamil Nadu DGP : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் முதல்வர் பழனிச்சாமி, புதுச்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக பாதுகாப்பு பணிகளை மேற்பாவையிட சென்னையில் இருந்து டிஜிபி ரஜேஷ் தாஸ் என்பவர் புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்ற மாவட்ட பெண் எஸ்பி ஒருவரிடம் டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி ரஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து சென்னை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க சென்னை வந்துள்ளார். அப்போது டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்பேரில், அவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுத்து நிறுத்திய அம்மாவட்ட எஸ்பி டி கண்ணன் என்பவர், பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸிடம் போனில் பேசும்படி வற்புறுத்தியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபி-சிஐடி அதிகாரிகள் உத்தரவின் பேரில், டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி டி கண்ணன் ஆகியோருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு டி கண்ணன் ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 354 (ஒரு பெண்ணிடம் அத்து மீறுதல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தலை தடைசெய்யும் பிரிவு 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில், பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைப்பு) சட்டம், 2013 (மத்திய சட்டம் 14 முதல் 2013 வரை) விதிகளின் படி இந்த குழு தேவையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். என்று உள்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த புகாரை விசாரிக்க கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எஸ்.பி. டி கண்ணன், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் வாகனத்தை நிறுத்துமாறு ராஜேஷ் தாஸ் தனக்கு அறிவுறுத்தியதாகவும், இந்த பாலியல் தொல்லை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.