சென்னை புளியந்தோப்பு பகுதியில் பின்னி மில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சில அரசுத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக லேண்ட்மார்க் ஹவுசிங் புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் கே.எல்.பி ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 பில்டர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
லேண்ட்மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டி உதயகுமார் மற்றும் கே.எல்.பி புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர்கள் சுனில் கெத்பாலியா மற்றும் மனீஷ் பர்மர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி ரொக்கமாக பணம் அளித்ததாக ஜனவரி 31-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் லேண்ட்மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் கேஎல்பி புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மேலும், பில்டர்கள் உதயகுமார், சுனில் கெத்பாலியா, மனீஷ் பர்மர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் மூலம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜீவ் நாயுடு இந்த பிரச்சினையை எழுப்பினார். 2017 டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சந்தேக நபர் டி. உதயகுமார் அளித்த வாக்குமூலத்தை அவர் இணைத்தார்.
முதற்கட்ட விசாரணை நடத்தி நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணை 2019-ல் நடத்தப்பட்டது. கோவிட்-19 காரணமாக தேசிய பொதுமுடக்கம் விதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 23, 2020-ல் வருமான வரி (விசாரணை) உதவி இயக்குநரால் பதிவு செய்யப்பட்ட உதயகுமாரின் அறிக்கையின் நகல்களை அதிகாரிகள் பெற்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட உதயகுமார், பலன்பெற்ற அரசு, தனியார் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விவரங்களை வெளியிட்டார். பின்னி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கும் போது லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறினார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், அனுமதி பெறுவதற்கும், பிற நோக்கங்களுக்காகவும் லஞ்சம் வழங்கப்பட்டது என்று கூறினார்.
அதிமுக முன்னாள் எம்பி பாலகங்காவுக்கு ரூ.23 லட்சம் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. தி.மு.க பிரமுகர் ஜவஹருக்கு ரூ.33 லட்சமும், மற்றொரு தி.மு.க பிரமுகருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ நீலகண்டனுக்கு ரூ. 40 லட்சமும், முன்னாள் எம்.பி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ரூ.1.67 கோடியும், மற்றொருவருக்கு ரூ.20 லட்சமும், முன்னாள் கவுன்சிலர் சரோஜாவுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“