/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-13T184359.538-1.jpg)
தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்.வி.சேகர் கைதாவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகரின் பெயர் அவ்வப்போது சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறார். ஊடகத்தினர் தவறாக பேசியதாக, ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
சமீபத்தில், பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் அதிமுக கொடி குறித்து விமர்சித்தார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நடிகர் எஸ்.வி.சேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்வார். அதனால், அவருடைய கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
முதல்வரின் கருத்துக்கு பதிலளித்துப் பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகர், “எம்ஜிஆர் சிலைக்குக் காவித் துண்டு போட்டதற்கு, காவியைக் களங்கம் எனக் கூறிய முதல்வர், சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியில் காவியை நீக்கிவிட்டு, பச்சை, வெள்ளை நிறம் கொண்ட கொடியை ஏற்றுவாரா?” என விமர்சித்தார்.
எஸ்.வி.சேகரின் இந்த விமர்சனத்தைச் சுட்டிக்காட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் எஸ்.வி.சேகர் மீது பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், சென்னை குற்றப்பிரிவு போலீசார், நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், நடிகர் எஸ்.வி.சேகர் இந்த வழக்கில் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.