கோவை சிறுவாணி சாலை, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வங்கிப் பூட்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில், திடீரென வங்கியில் இருந்து புகை வெளியாவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஷட்டரைத் திறந்து பார்த்தபோது, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த UPS பேட்டரியில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ முழுவதும் பரவியது தெரியவந்தது.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.