சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே விசைப்படகுகள் கட்டும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை, மீன்பிடி தடை காலங்களில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
விசைப்படகுகளுக்கு தேவைப்படும் உதவி பாகங்கள், மரக் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டிவைக்கும் இடமாக இந்த பகுதி பார்க்கப்படுகிறது.
அத்துடன் பொதுமக்கள் தங்களது குப்பைகளையும் இங்கு கொட்டி வருகின்றனர். இதனால், டீசல் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் அதிகமாக இங்கு உள்ளது.
எதிர்பாராத நேரத்தில் மர்ம நபர்கள் இங்கு தீ வைத்ததாக அக்கம் பக்கத்தில் பேசப்படுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு, காற்றின் வேகத்தில் பரவத் தொடங்கியது.
தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் பரவி, சாலைகளை மறைக்கும் அளவிற்கு சென்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.