ஒசூர் அருகே உள்ள வன்னியபுரம் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 5,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையின் யூனிட் 4-ல் உள்ள BAND என அழைக்கப்படும் கெமிக்கல்ஸ் தயாரிக்கும் பிரிவில் சுத்திகரிப்பு பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டென தீ அருகிலும் பரவியது. இதனால் அங்கிருந்து கரும்புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சியளித்தது. ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
புகைமூட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி மற்ற அலகுகளில் பணிபுரிந்த நைட் ஷிப்ட் ஊழியர்கள் உள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் கூட சுமார் 10 ஊழியர்கள் மயக்கமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 2 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“