திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சக்தி தலங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இங்கு, பூச்சொரிதல் விழா நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவில் குருக்கள் திருக்கோவில் சன்னிதானத்தில் வலது பக்கம் உள்ள அருள்மிகு சூரப்ப நாயக்கர் அம்பாளுக்கு (அபிஷேக அம்பாள்) தீபாரதனை காட்டும்போது, கையை மேலே தூக்கிய சமயத்தில், மேல் பந்தலில் கட்டி இருந்த வெட்டிவேரில் தீ பற்றிக்கொண்டது.
இதில் சமயபுரம் சன்னதி வீதியைச் சேர்ந்த நாகநாதன், (55) வலது தோள்பட்டையிலும், சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த, குரு, (40) என்பவருக்கு முகம் மற்றும் இரண்டு கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.
உடனே இரண்டு குருக்களும் சமயபுரம் எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு நலமுடன் திரும்பி வந்தனர். வெட்டிவேரில் பிடித்த தீயை அங்கிருந்த புடவையை கொண்டு சிலர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அந்த புடவையிலும் தீப்பற்றியது. பின்னர் பக்தர்கள் ஒரு வழியாக வெட்டிவேரில் பற்றிய தீயினை அணைத்தனர்.
சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, காலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் தரிசனம் சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்து, கோவில் புனிதப்படுத்தும் பணி நடைபெற்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“