திருச்சி மண்டல மத்திய மண்டல தீயணைப்புத்துறை நிலையை அலுவலகத்தில் விபத்து கரும்புகை உள்ளிட்ட அவசர தேவைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பொழுது சிலிண்டர் வெடித்ததால் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இதனால் பிரசாந்தின் இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. அப்பொழுது அவருடன் பணியில் இருந்த நிலைய அலுவலர் சரவணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து காயம் அடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தற்போது பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் பொழுது கையாள்வதில் ஏற்பட்ட சிக்கலால் விபத்து ஏற்பட்டு இருக்குமா என்ற கோணத்திலும் அல்லது விபத்திற்கான வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்பது குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் சேரன் மற்றும் உதவி ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆக்ஸிஜன் காற்று சிலிண்டர் 3 கிலோ எடை கொண்டது. தீ விபத்தின்போது ஏற்படும் புகை மண்டலம், விஷவாயு தாக்குதல் சமயங்களில் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுத் திணறல் அபாயம் ஏற்படும். அது போன்ற ஆபத்தான சமயங்களில் தீயணைப்பு வீரர்கள் இந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்பர். அப்படியான இந்த சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும்போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் சென்னை சில்க்ஸ் அருகே பலூனின் நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இதில் ஒரு சிறுவன் கண் பார்வைக்கு இன்று வரை சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு சிலிண்டர் விபத்து திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"