கோதாவரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும் என மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது, தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரை மறைமுகமாக மறுக்கும் விஷயம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக நெடுஞ்சாலை, துறைமுகம் சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை)
நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, "கோதாவரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும்", என கூறினார்.
தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரை பெற்றுத்தரவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, கோதாவரி நீரை பெற்றுத்தரும் என அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது தமிழகர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயல் என, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கோதாவரி பாயும் ஆந்திரா, மஹராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று, தமிழகத்திற்கு தண்ணீர் தரப்போகிறோம் என அமைச்சர் நிதின் கட்காரி சொல்லிவிட்டு தப்பிக்க முடியுமா?", என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நீங்கள் சொல்ல வருவது எப்படி இருக்கிறதென்றால், தமிழக மக்களே, நீங்கள் ஏன் உரிமையுள்ள காவேரி நீருக்காக போராடுகிறீர்கள், உரிமையில்லாத கோதாவரியை நாங்கள் தருகிறோம் என்று சொல்வது போன்றது தான். மறைமுகமாக தமிழகத்திற்கு உரிமையுள்ள காவேரியை மறுப்பதற்கான விசயம் தான் நீங்கள் சொல்வது.", எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.