போயஸ் கார்டனில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடன் இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது இறுதி நாளான டிசம்பர் 31ம் தேதி, 'நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம். யாருடனும் கூட்டணி வைக்காமல், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனிச்சையாக போட்டியிடப் போகிறேன். என்னுடையது ஆன்மீக அரசியல். தமிழகத்தின் நிலவும் மோசமான சிஸ்டத்தை மாற்ற வேண்டும். அது நம் கடமை" என்று அறிவித்தார்.
ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு பின்னர், அவரது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இருப்பினும், கட்சியின் சின்னம், கொள்கை என்னவென்று ரஜினி இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.
இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தில் ரஜினியை விட ஒரு படி முன்னதாக சென்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதம் 21ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை கமல் தொடங்குகிறார். அன்றே கட்சியின் பெயரையும் கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'இந்தியாவில் சிஸ்டம் சரியில்லையா? அல்லது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லையா?' என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், கமலுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதிய கமல்ஹாசன், "ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார். தற்போது ரஜினியும் அதே பதிலை கூறியுள்ளார்.