ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் INT - TN -10 - MM 73 என்ற எண் கொண்ட கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புதன்கிழமை இரவு மூக்கையா முத்து, முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து விசைப்படகு மீது இலங்கை ரோந்து கப்பலை மோதிச் செய்ததில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர். இந்நிலையில் மூக்கையா முத்து, முனியாண்டி ஆகிய இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மலைச்சாமி என்ற மீனவர் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் தகவல் அறிந்த மீனவரின் குடும்பத்தினர் ஒன்று கூடி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்ணீருடன் காத்துக் கிடந்தனர். திடீரென ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடலை மீட்டு கொண்டு வரவும், மீதமுள்ள மூன்று மீனவர்களையும் பத்திரமாக தாயகம் அனுப்பக் கோரியும் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகார துறை அமைச்சகத்திற்கு, இலங்கை தூதர்களை அழைத்து, வெளியுறவுத்துறை அதிகாரிகள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து மாயமான மற்றொரு மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“