திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை (20 வயது). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்த போது, வேறு சமுதாய மாணவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர்.
அபோது, தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெட்டு காயங்களில் இருந்து குணமடைந்த அவர் பன்னிரண்டாம் வகுப்பில் 78% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்தார். அவரது உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவர் சின்னதுரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆன்லைன் செயலி மூலம் பழகிய சிலர், சின்னதுரையை தனியாக வரவழைத்து சரமாரியாக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம்,மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரித்து வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.