ஜெயலலிதா இருந்தபோது, இரண்டு முறை குறுகிய காலம் முதலமைச்சராக இருந்தார், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக இருந்தார். இப்படி தமிழ்நாட்டில் 3 முறை குறுகிய கால முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டு, கட்சிப் பெயரையும், கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுள்ளார்.
அ.தி.மு.க-வை மீண்டும் தன் பிடிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என போராடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதல் நபராக பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். பா.ஜ.க தங்கள் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் தொகுதிகளை ஒதுக்கிய பின்னர், ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒரே ஒரு தொகுதியாக ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கியது.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும், அப்படி முடக்கப்பட்டால், தனக்கு பக்கெட் சின்னம் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் என்கிற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் 4 வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில், ஓ. பன்னீர்செல்வம் என்கிற அதே பெயரில், அதே இனிஷியல் உடன் 4 ஓ. பன்னீர்செல்வம்கள் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்கிறார்கள். அதாவது, ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், ஒற்றாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என மொத்தம் 4 ஓ. பன்னீர்செல்வம்கள் ஒ.பி.எஸ்-ஐ எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மற்ற 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதன் மூலம், ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து 4 ஓ. பன்னீர்செல்வம்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனால், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரையும் சின்னத்தையும் வாக்காளர்கள் அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“