கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணைக்கு சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடிக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட நவக்கரையை அடுத்த மாவுத்தம்பதி ஊராட்சி, மொடமாத்தி பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மங்களூரில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் நவம்பர் 26ஆம் தேதி இரவு, கருவுடன் பெண் யானை உட்பட 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர்,உதவி ஓட்டுநர் இருவரிடமும் ரயில்வே மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், கோவை வனத்துறையினர், ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், யானைகளை மோதிய போது ரயிலின் வேகம் குறித்து விசாரிக்க, பாலக்காடு ரயில் நிலையத்திற்கு சென்ற 5 தமிழக வனஅலுவலர்களை, அங்கிருந்த ரயில்வே போலீஸ் சிறைப்பிடித்த வைத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பிடித்து வைத்துள்ள ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநரை விடுவித்தால் மட்டுமே உங்களை இங்கிருந்து விடுவிப்போம் என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, வன அலுவலர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம், கோவை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் தலைமையிலான உயரதிகாரிகள், பாலக்காடு கோட்ட ரயில்வே உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலையாளி சமாஜக் கட்டடம் அருகே போராட்டம் நடத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், ரயில்வே அதிகாரிகள் சிலர் நேற்று மாலை கோவைக்கு வந்துள்ளனர். அப்போது, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாலை 6 மணியளவில் இரண்டு தரப்பு அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். ஏறத்தாழ 6 மணி நேரம் தமிழக வனத்துறை அதிகாரிகள், பாலக்காட்டில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil