சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு பள்ளிகரணையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் அனிருத் விளையாடுவதற்காக நேற்று தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நீச்சல் குளத்தில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. அந்த சிறுவன் நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, நீச்சல் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வெளியே வராததால், பெற்றோர் அங்கே இருப்பவர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கே இருந்தவர்கள் நீண்ட நேரம் தேடிய பிறகு சிறுவனை மீட்டனர். இதைத் தொடர்ந்து, பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கே சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளம் பரமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் கவனக் குறைவால் சிறுவன் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
மேலும், நீச்சல் குளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கலூம் இயங்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று (26.08.2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன்.
சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்.
சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”