மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து விஜயவாடாவிற்கு நேரடி விமான சேவை வருகிற 30-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
மதுரையில் இருந்து விஜயவாடாவிற்கு தற்பொழுது பெங்களூரு, ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். ஆனால், வருகிற 30-ம் தேதி முதல் மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக ஒரே விமானத்தில் விஜயவாடாவிற்கு செல்லலாம்.
மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அங்கு 30 நிமிடம் கழித்து 10.15 மணிக்கு புறப்பட்டு 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும். அதேபோல, விஜயவாடாவில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 7.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அங்கிருந்து 30 நிமிடம் கழித்து 7.55 மணிக்கு புறப்பட்டு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.