ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் ஷார்ஜா செல்லும் விமான சேவைகள் இன்று (ஜூன் 24) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வளைகுடா நாடுகளுக்கு பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டது, இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சியில் இருந்து இன்று மதியம் 1.55 மணிக்கு துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததால், திருச்சி விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்லக் காத்திருக்கும் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்