மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம், மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம், கொச்சியில் தரையிறக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக விமான சேவையும் பெருமளவு பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் திருச்சி விமான நிலையம் அருகே வந்த போது, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால், விமானம் திருச்சியில் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்பேரில், கொச்சியில் தரையிறக்கப்பட்ட விமானம், திருச்சியில் வானிலை சீரானதும் மீண்டும் திருச்சிக்கு வந்து தரையிறங்கியது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டாலும், பாதுகாப்பாக தரையிறங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“