வைகை அணை வெள்ள அபாய எச்சரிக்கை : இந்த வருடம் பருவ மழை மிகவும் விரைவாகவே தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அணைகள் இரண்டாவது மூன்றாவது முறையென தங்களின் முழுக் கொள்ளவை எட்டி வருகிறது. மேட்டூர் அணை போன்றே வைகை அணையும் இரண்டாவது முறையாக தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டியது.
ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து வைகை அணை பாயும் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மற்றும் மதுரை பகுதியில் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாறக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை 71 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கிறது வைகை அணை. நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு, மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரை வைகை அணையில் தேக்கி வைப்பது வழக்கம்.
இங்கு தேக்கி வைக்கப்படும் நீர் இந்த ஐந்து மாவட்டங்களின் பாசன வசதிக்காக திறக்கப்படுவது வழக்கம். இவ்வணை இரண்டாம் முறை நிறைந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.