ஃபீஞ்சல் புயல் காரணமாக 7 மாவட்டங்களுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபீஞ்சல் புயலாக உருமாறியது. புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இவை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த ஃபீஞ்சல் புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது. இந்த சூழலில் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை ECR, OMR சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் நீர் நிலைகளில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை (நவ 29 & 30) குறிப்பிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“