Flood alert issued: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் தொடர் கன மழை காரணமாக அம்மாநிலத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளுக்கு வரும் நீரை பாதுகாப்பு காரணமாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள மேட்டு அணை வேகமாக நிரம்பிவருகிறது.
மேட்டூர் அணையில் நேற்று முன் தினம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 61.88 அடியாக இருந்தது. காவிரியில் நீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம், 82.62 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,65,000 கன அடி நீர் வருகிறது. இதனால், 1000 கன அடி நீர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது. தற்போது, மேட்டூர் அணையில் 44.61 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால், மேட்டூர் அணையின் அருகிலுள்ள தாழ்வான பகுதிகளான மூலகாடு, பலவாடி, கோட்டையூர், காவேபுரம், கோவிந்தபாடி, கருங்கலூர், சேட்டியூர், சின்ன மேட்டூர் மற்றும் கூனந்தியூர் போன்ற ஊர்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறுசேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்கள் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெள்ள அபாய எச்சரிக்கையில், மேட்டூர் அணையின் நீர் பரவும் பகுதிகளில் மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதோடு, பொதுமக்கள் செல்பி எடுப்பதற்காக நீரில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மீன்வளத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முன்னெச்சரிக்கையாக தாயார் நிலையில் உள்ளனர்.