காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணை ஜூலை 19-ல் திறக்கப்படுகிறது.
காவிரி பாசன விவசாயிகளுக்கு இப்போதுதான் மனம் குளிர்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, கறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது ஒரு ஆறுதல்! அந்த உத்தரவுக்கு பங்கம் நேராத அளவில் கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்குவதால், தமிழ்நாடு கேட்காமலேயே தண்ணீர் திறந்து விட்டாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு!
கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டிருக்கிறது கர்நாடகா! இதனால் இரு மாநில எல்லைப் பகுதியான பில்லிகுண்டுவைக் கடந்து ஒக்கேனக்கல் நீர் வீழ்ச்சியில் வெள்ளமாக தண்ணீர் வந்து பாய்கிறது.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தண்டோரா மூலமாக இதை அறிவித்தனர்.
இதற்கிடையே காவிரியில் கூடுதல் தண்ணீர் வருவதால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று (ஜூலை 16) காலை நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.
ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகலில் அறிக்கை மூலமாக அறிவிப்பு வெளியிட்டார். மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால், காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.