Advertisment

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை… 77% அதிக மழைபொழிவு; எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு?

கனமழையால் சென்னையில் மொத்தமுள்ள 44 லட்சம் மின் இணைப்புகளில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை… 77% அதிக மழைபொழிவு; எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு?

சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் கோர தாண்டவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை திணறு வருகிறது.

Advertisment

நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தததால், குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில், மக்கள் தவித்து வருகின்றனர்.

அணைகளும், நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதன் காரணமாக, உபர் நீர் அதிகளவில் திறக்கப்பட்டதில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, வேளச்சேரி பகுதி தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல சாலைகளில் இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கிநிற்பதாகக் கூறப்படுகிறது. வீடுகளில் சிக்கிக்கொண்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மணலி கலைஞர் நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர்,திருவொற்றியூர், ராஜாஜி நகர், சத்யமூர்த்தி நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளிலும் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

முக்கியமாக வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. தாம்பரம், ஆவடி, வேளச்சேரி, தி நகர், அடையாறு ஆகிய பகுதிகள்தான் இந்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மழை நீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்களால் வெளியே செல்ல முடியவில்லை. டூ வீலர்களிலும் வெளியே செல்ல முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.

கனமழையால் சென்னையில் மொத்தமுள்ள 44 லட்சம் மின் இணைப்புகளில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் எந்த தடையுமின்றி மின் விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வியாசர்பாடி, கணேஷபுரம், அஜாக்ஸ், கொங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கான் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன

அதே போல், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரல், பீச் ரயில் நிலையங்களில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மின்மோட்டார்கள் மூலம் தேங்கிய வெள்ளநீர் அகற்றப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து சீரானது.

மேலும், 2வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன. இன்று(நவம்பர் 11) மாலை 6 மணியளவில் சென்னைக்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் தாம்பரத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Weather Rain In Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment