கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி முக்கொம்பு, காவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாதுகாப்பு கருதி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று முக்கொம்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெள்ள நிலவரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கரை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து வகையில் 60 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் போது கொள்ளிடம் 2 லட்சம் கன அடி தண்ணீரை உள்வாங்கியது. இந்த முறை அந்த அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரிக்கவில்லை. இருப்பினும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ செல்ல கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் துறை, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மூடப்பட்டுள்ளது. நாளை ஐப்பசி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் காவிரியில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு தர்ப்பணம் கொடுக்கவோ, குளிக்கவோ மக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“