தமிழ்நாட்டிற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் 4 மாவட்டங்கள் மற்றும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேதிய பேரிடராக அறிவித்து அதற்கான நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.8,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அதில் முதற்கட்டமாக ரூ, 3000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. தமிழ்நாடு அரசே இதனை பார்த்துகொள்ளும். இது நிர்வாகம் சமந்தபட்டது என்பதால் பிரச்சனை இருந்தால் தமிழ்நாடு அரசே முறையிடுவார்கள் என்று மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“