Advertisment

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி உள்ளது: நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதில்

சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத் தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது- உதயநிதி ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Udhayanidhi II
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் மழை, வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசு மற்றும் மத்திய பா.ஜ.க அரசு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

Advertisment

இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். 

சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். 

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!"  என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக் கிழமை டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணியில் மத்திய அரசின் பங்கு குறித்து பேசி இருந்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்தார். அதோடு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசும் போது, “அரசியல் பயணத்தில் வளர்ந்து வரும் அமைச்சர் உதயநிதி கவனமாக பேச வேண்டும்” எனக் கூறினார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது  X பக்கதில், "மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள். 

தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார். அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம். 

DMK Files வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.  முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. 

4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்துவிட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, திமுக அமைச்சர் கே என் நேரு சொன்னார். 

98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம்.  

ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. 

மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள். 

ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்ததாக சொல்லப்படும் நீரோ மன்னன் போல தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்த போது தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் இந்தி கூட்டணி சந்திப்பில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார். 

அங்கு திமுகவினருக்கு மொழிபெயர்க்க முடியாது என்றும் திமுகவினர் இந்தி கற்க வேண்டும் என்றும் உங்களை பீகார் மாநில முதல்வர் அவமானப்படுத்திய போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்று தந்ததை திடீரென்று மறந்துவிட்டீர்களா? 

விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.  மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை தமிழக பா.ஜ.க வெள்ளை அறிக்கையாக கொடுத்துள்ளது.  தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது. அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

tamilndu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment