/indian-express-tamil/media/media_files/3SWt2sappHRQFn5mS0li.jpg)
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விடுவிக்காததை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Lok Sabha | BJP | DMK MPs TR Baalu A Raja: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாகவும், நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் மக்களவையில் ஆ.ராசா எம்.பி குற்றச்சாட்டு வைத்தார்.
மக்களவையின் இன்றைய நிகழ்வின்போது தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், "தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குவது எப்போது? எவ்வளவு வழங்கப்படும்?. குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுகிறது.
மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும், இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும் நிலையை அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "சென்னைக்கு மட்டும் மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது; வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிய திட்டங்களை சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது; வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் குழுவிற்கு முன் மத்திய குழுதான் சென்றது" என்றார்.
இதையடுத்து வெள்ள நிவாரணம் கோரி தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், "வானிலை மையம், பேரிடர் குறித்து சரியான கணிப்பை வழங்கவில்லை" என்றார்.
அப்போது மத்திய அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். இதனால் மக்களவையில் தி.மு.க., பா.ஜ.க. எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமாக பேசிய எம்.பி. டி. ஆர். பாலு, “மத்திய இணை அமைச்சர், எம்.பி.யாக இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து இரு கட்சி உறுப்பினர்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர், தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விடுவிக்காததை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.