கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இதனால் இந்த ஆண்டு குறித்த நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 58,105 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 43,429 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு ஆர்ப்பரித்து வந்து சேர்ந்தது. இன்று காலை முக்கொம்பு அணைக்கு 24,713 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 4 மணி முதல், முக்கொம்புக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் 25,000 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், கல்லணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கல்லணையிலிருந்து இன்று காலை 9,312 கன அடி காவிரி ஆற்றுக்கும், 9,306 கன அடி வெண்ணாற்றுக்கும், 3,514 கன அடி கல்லணைக் கால்வாய்க்கும், 2,255 கன அடி கொள்ளிடத்திற்கும் என மொத்தம் 24,397 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று மாலை கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், நீர்நிலைகளுக்குச் சென்று செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - க. சண்முகவடிவேல்.