நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, நெல்லை டவுன், முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால், கரையோரம் வசிக்கக் கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மாவட்டம், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மற்றொரு புறம், தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி ஆறுகள் மூலம் தாமிரபரணிக்கு அதிக நீர் வருகிறது. இதனால் தாமிரபரணியில் சுத்தமல்லி அணைக்கட்டுக்கு சுமார் 41,000 கன அடி நீர் வருகிறது. இந்த நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை. எனினும், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதேபோல், தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“