scorecardresearch

காவிரியில் வெள்ளம்… ஜம்புகேஸ்வரர் தெப்பக் குளத்திற்கு தண்ணீர் ஏன் வரவில்லை?

நம் முன்னோர்கள் அன்றையக் கால கட்டங்களில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து, எதிர்கால மக்களுக்கு வாழ்வாதாரங்களை சிறக்க கோயில்களை கட்டி அங்கே குளங்களை வெட்டி வைத்தார்கள்.

Cauvery water not coming to Jambukeshwarar Pond
ஜம்புகேஸ்வரர் ஆலய தெப்பக் குளத்திற்கு காவிரி நீர் வராத நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான விளங்கும் ஜம்புகேஸ்வரர் – அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ஆடி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சூரிய குளத்தில் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மூலம் 24-மணி நேரமும் நீர் எடுக்கப்பட்டு அதே குளத்தில் நீர் நிரப்படும் அவல நிலையை ஆதாரபூர்வமாக மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த பல நாட்களாக காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் பல இலட்சம் கன அடி தண்ணீர் இரு கரையையும் தொட்டு சீறிபாயும் நிலையில் இவ்விரு நதிகளுக்கிடையே இருக்கும் புண்ணிய பூமியும் பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான அன்னை அகிலாண்டேஸ்வரி அருள் ஆட்சி செய்யும் திருவானைக்காவல் திருக்கோவிலில் அமைந்துள்ள சூரிய தெப்பகுளத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சூரிய குளத்தை நிரப்பிக்கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.

காலம் காலமாய் கோயில் குளம் எங்கு பார்த்தாலும் அருகிலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகளில் இருந்து நீர் வரத்துக்கு வழிவகை செய்திருப்பர் நம் முன்னோர். அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் சூரிய குளத்திற்கும் நீர் வரத்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வரும் வகையில்தான் பண்டைய காலத்தில் வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் நீர் வழி தட ஆக்கிரமிப்பினால் திருவானைக்காவல் சூரிய குளத்திற்கு தெப்பத் திருவிழா நாளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் மிக விமரிசையாக நடைபெறும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் தெப்போற்சவத்திற்கு காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இன்றைய நிலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு திருவானைக்காவல் சூரிய குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர் வாறியும், தண்ணீர் செல்லும் பாதைகளை மறைத்து, ஆக்கிரமித்து அதன்மீது கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டடங்களை அகற்றி பழமையை காப்பாற்ற வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டதோடு பொதுமக்களிடத்திலும் விழிப்புணர்வை திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளரும், வழக்கறிஞருமான கிஷோர்குமார் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தநிலையில் 27-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் தேவி மஹாலில் மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார் மாநகர மேயர் அன்பழகனிடம் மனுக்களை கொடுத்தார்.

அந்த மனுவில் அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை போல மனித இனத்தை அழிவிலிருந்து காத்திடவேண்டும் என்றக் கோரிக்கை இடம் பெற்றிருந்தது. மாவட்டத்தின் பிரதான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும் நிலையில் நதிகளுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிரசித்திபெற்ற திருவானைக்காவல் தெப்பத் திருவிழாவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை தடுத்து நீர் வழிப்பாதைகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்பை அகற்றி, நீர்வழித்தடத்தை தூர்வாறிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நம் முன்னோர்கள் அன்றையக் கால கட்டங்களில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து, எதிர்கால மக்களுக்கு வாழ்வாதாரங்களை சிறக்க கோயில்களை கட்டி அங்கே குளங்களை வெட்டி வைத்தார்கள். அதுமட்டுமின்றி பொதுமக்களின் அனைத்து பயன்பாட்டுக்காகவும் ஊர் தோறும் ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.
அப்படி வெட்டப்பட்ட குளங்கள், ஏரிகள் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கின்றது. கோயில் குளங்களோ தூர்வாரப்படாமல் பாழடைந்து பரிதாப நிலையில் இருக்கின்றன. எனவே, விஞ்ஞான வளர்ச்சியால் அழிந்து வரும் சிட்டுக்குருவி இனம் போல் மனித இனமும் வறுமையாலும், நீராதாரங்கள் ஆக்கிரமிப்பால் பஞ்சத்தாலும் அழியும் முன்பு மக்களை காக்கவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்டம் சார்பில் திருவானைக்காவல் சூரிய தெப்பகுள நீர் வழி தட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மாவட்ட செயலாளர் வக்கீல்.எஸ்.ஆர்.கிஷோர்குமார் தலைமையில் மனுயளிக்கப்பட்ட நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், மாவட்ட பொருளாளர் கருப்பையா, வழக்கறிஞர் விஜயநாகராஜன், நற்பணி இயக்க முன்னாள் அமைப்பாளர் கே.ஜே.எஸ்.குமார், ஒன்றிய செயலாளர்கள் கணேஷ், சுப்பராயன், சசிகுமார், லாயிஜ் ஜோசப், வட்ட செயலாளர் ஆட்டோ பாஸ்கர், இளைஞரணி கார்த்திகேயன், மாதவன் மற்றும் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Flooding in cauvery but water not coming to jambukeshwarar pond