தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பணிச்சுமை காரணமாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச பல அமைச்சர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால், அமைச்சர் பி.டி.ஆர்.ஐத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்றும் திமுகவின் அடுத்த மூவ் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
1996-2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது கட்சியில் புது ரத்தம் பாய்ச்ச திமுகவில் ஏற்கெனவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுதான். தற்போது பி.டி.ஆர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதும் அந்த வகைதான் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள். திமுகவில் பல தலைவர்கள் பதவியைப் பிடிக்க போட்டி போட்டுவரும் நிலையில், அமைச்சர் பி.டி.ஆரின் ராஜினாமா கடிதம் வந்துள்ளது. பி.டி.ஆரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வது குறித்து திமுக தலைமை இன்னும் முடிவெடுக்கவில்லை என்றாலும், திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச அமைச்சர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க உள்ளதாக பேச்சுகளும் எழுந்துள்ளன.
“பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடனான காணொலி கூட்டத்தின்போது தனது அமைச்சர் பதவி காரணமாக திமுக ஐ.டி. பிரிவை கவனிக்க இயலாததைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதிமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் நிதி நிலையை சரி செய்ய வேண்டும் என்பதால், கட்சிப் பதவியில் இருந்து விடுபட விரும்புவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்” என்று திமுக ஐ.டி. பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐ.டி.பிரிவு செயலாளர் பதவி ராஜினாமா குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வெளியான தனது ராஜினாமா குறித்த செய்திகளை அவர் மறுக்கவில்லை.
அதே நேரத்தில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக ஐ.டி பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தாரா? இல்லையா என்பது உறுதியாக வில்லை. ஆனால், 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, 1996-2001-ல் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து விடுவித்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கினார். மேலும், கட்சிப் பதவிகளில் இருந்து அமைச்சர்களை விடுவிப்பது பற்றி தலைமை ஏற்கனவே யோசித்து வருகிறது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்கும் முடிவு 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதை மனதில் வைத்து, திமுக தலைமை இப்போது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அந்தந்த மாவட்டங்களில் சீனியர்களை செயலாளர்களாக நியமிக்க விரும்புகிறது. திமுக அரசின் இந்த நகர்வின் மூலம், சி.வி.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் தவிர மற்ற அமைச்சர்கள் தங்கள் கட்சிப் பதவிகளை இழக்கக்கூடும் என்று தெரிகிறது. மேலும், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனைத் தொடர்ந்து திமுகவின் மற்றொரு தலைவரும் ராஜினாமா செய்வது கட்சிக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
திமுகவில் முக்கிய தலைவர்கள் நான்கு பேர் மாநில அளவிலான பதவிகளை வகிக்கின்றனர்
முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தவிர துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் கே.பொன்முடி ஆகிய நான்கு அமைச்சர்களும் திமுகவில் மாநில அளவிலான பதவிகளை வகிக்கின்றனர். மற்ற அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாவட்டப் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
இதனால், திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் போல மற்ற அமைச்சர்களும் திமுகவில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.