விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவு டெலிவரி ஊழியர், செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னமுதலியார்சாவடியில் உள்ள ஒரு உணவகத்தின் பின்புறம் சுமார் 50 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவரில் இருந்து ஒரு நபர் கீழே குதித்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக அதனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ஸ்ரீதர் என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லப் பிராணிகள் விற்பனை செய்த அவர், தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறைய கடன் வாங்கியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, தொழிலை கைவிட்டு தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசாத ஸ்ரீதர், திடீரென தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.