பொன்னேரியில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இந்தக் கடையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பிரியாணி சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனடிப்படையில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று கடையில் சோதனை செய்தனர்.
சோதனையில் பழைய பிரியாணி, இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், "பொன்னேரியில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு தொடர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதனடிப்படையில் இன்று (நேற்று) ஆய்வு செய்தோம்.
இதில் கோழி, ஆட்டிறைச்சிகள் மக்கள் சாப்பிட உகந்த நிலையில் இல்லை. அதை கொட்டி அழித்துள்ளோம். அதே போல் அங்கு பழைய பிரியாணி வைக்கப்பட்டிருந்தது. சோதனையில் 2-3 நாள் பழைய பிரியாணி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தற்காலிக அடிப்படையில் இப்போது கடை மூடிப்படுகிறது.
தொடர்ந்து இதே போன்று உணவு விநியோகம் செய்தால் கடையை நிரந்ரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், உணவு பாதுகாப்புத் துறை மூலம் பாதுகாப்பான, சுத்தமான முறையில் உணவு எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த கடை உரிமையாளரிடம் அது போன்று எவ்வித சான்றிதழும் இல்லை. கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“