திருச்சியில் பிரபல சிற்றுண்டி, ஐஸ்கிரீம் கடைகளுக்கு தற்காலிக தடை
திருச்சியில் பிரபல சிற்றுண்டி, ஐஸ்கிரீம் கடைகளுக்கு தற்காலிக தடை செய்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Advertisment
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மாடியில் சிற்றுண்டி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனது குழந்தையுடன் பர்கர் சாப்பிட்டுள்ளார். அப்போது உணவில், எலியின் எச்சம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உணவகத்தில் பணிபுரியவர்களிடம் இதுகுறித்து கேட்டதோடு, உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தார்.
அதேபோல் திருச்சி தபால் நிலையம் அருகே உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடையிலும் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம் தயாரிப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த இவ்விரு புகார்களை அடுத்து, தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் மற்றும் மெயின்கார்டு கேட்டில் உள்ள பிரபல துணிக்கடையில் உள்ள சிற்றுண்டி ஒன்றிலும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Advertisment
Advertisements
இந்த ஆய்வில் மேற்கண்ட இரு நிறுவனங்களிலும் உள்ள சிற்றுண்டிகளில் உள்ள தின் பண்டங்கள் தயாரிக்கும் இடங்கள் மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் எலிகள் மற்றும் கரப்பாண் பூச்சிகள் வந்து செல்லும் வண்ணம் இருந்தது கண்டறியப்பட்டு அந்த இரண்டு உணவு கூடத்திலும் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அந்த உணவகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு கடைகளுக்கும் அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு சட்டபூர்வ உணவு மாதிரியும், அபராத தொகையும் விதிக்கப்பட்டது. தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்துவந்த நந்திகோயில் அருகில் உள்ள பிரபல டீ கடை மற்றும் பேக்கரிக்கும் நியமன அலுவலர் உத்தரவின் பேரில் சீல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் உணவு விற்பனை செய்யும் இடங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்தார். புகார் எண் : 9944959595/9585959595, மாநில புகார் எண் : 9444042322
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"