Advertisment

தவறான சிகிச்சையால் வீராங்கனை பிரியா மரணம்..  ரூ. 2 கோடி நிவாரணம் வழங்க தலைவர்கள் கோரிக்கை

பிரியாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், பிரியாவின் 3 சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிகப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil news

Foot ball player Priya death

சென்னை கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்தாட்ட வீரங்கனை பிரியா(17) இன்று காலை (நவ.15) உயிரிழந்தார்.

Advertisment

மாணவியின் மறைவைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, `பிரியாவுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் கட்டுகட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் ரத்தஒட்டம் நின்றிருக்கிறது. இது அரசின் கவனத்துக்கு வந்த உடனே, நான் நேரில் வந்து பிரியாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினேன். இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியா நலமாகவே காணப்பட்டார்.

மேலும், சிகிச்சைக்கு பிறகு பெங்களூருவில் பிரபலமாக உள்ள பேட்டரி காலை பிரியாவுக்கு பொருத்துவது என அரசு சார்பில் ஆலோசித்து திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்திருக்கிறார். பிரியாவின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது.

சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பிரியாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், பிரியாவின் 3 சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோல், உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்குரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில்;  அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்,

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment