ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்துவது என்ற அந்நிறுவனத்தின் முடிவின் காரணமாக, ஃபோர்டுக்கு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் மாநிலம் முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) சென்னையில் சந்தித்தனர்.
தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) அலுவலகத்தில் கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன் எம்.எஸ்.எம்.இ பிரிவு நிறுவனங்களின் பிரச்னைகளைக் கேட்டார்.
சென்னையில் ஃபோர்டு நிறுவனம் கார் தயாரிப்பை நிறுத்துவதால் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.4 கோடி வரை இழப்பை சந்திப்பார்கள் என்று தெரிவித்தனர்.
பல்வேறு எம்.எஸ்.எம்.இ உற்பத்தி அலகுகளின் தலைவர்கள் அளித்த தரவுகளின்படி சுமார் 15% உற்பத்தி நேரடியாக ஃபோர்டுக்கு செல்கிறது. மீதமுள்ள 85% மற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஃபோர்டுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்குகின்றன.
திருமுடிவாக்கத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள எக்செல் டை காஸ்டிங்ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.நற்குணம் ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், “நாங்கள் அலுமினியம் பிரஸ்ஸர் வார்ப்புகளை உற்பத்தி செய்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்திற்கு 2 அடுக்கு கண்ணாடி பாகங்களை வழங்கி வருகிறோம். ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உற்பத்தியை மூடுவதால் நாங்கள் ரூ.2.28 கோடி மதிப்புள்ள 2021-22ம் ஆண்டிற்கான ஆர்டர்களை நாங்கள் இழக்க நேரிடும்.” என்று கூறினார்.
அதே போல, பிளாஸ்டிக் இன்ஜெக்ஷன் மோல்டிங் தயாரிப்புகளை உருவாக்கும் டில்சன் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தியை நிறுத்துவதால் மாதத்திற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர். டில்சன் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் கடந்த 10 ஆண்டுகளாக ஃபோர்டு tier-1 நிறுவனத்திற்கு மாதத்திற்கு 30,000-40,000 உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருவதாகக் கூறினார்.
கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இணைப்பு சுவிட்சுகள் மற்றும் கியர் ஷிஃப்டர்களை உற்பத்தி செய்து அளிக்கும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பிஎம் டெக்னோ நிறுவனம் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலையை மூடுவதால், மாதத்திற்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வணிகத்தை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொழிற்சாலையை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைப் பற்றி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைவர்கள் அமைச்சர் அன்பரசனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் பிரச்னைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினார்.
ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து அளிக்கும் பணியில் சுமார் 75 பெரிய நிறுவனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 2,600 ஊழியர்களின் எதிர்காலம் குறித்து சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் ஃபோர்டு நிர்வாகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"