நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் அரங்கில் மே 10-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்ட உப்பளம் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில் மும்பை இயற்கை வரலாற்று கழக இணை இயக்குநர் முனைவர் பாலசந்திரன், மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா ஐ.எப்.எஸ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஐ பி எஸ், கன்னியாகுமரியை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் சுதாமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து என்னென்ன வகை பறவைகள் வருகின்றன? எத்தனை ஆண்டுகளாக வருகின்றன என்ற கேள்விக்கு பாலசந்திரன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல வகை பறவைகள் குமரிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இங்கு 700_ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கான ஏற்ற காலச்சுழல் மட்டும் அல்லாது பலவகை பறவைகளின் இன விருத்திக்கும் ஏற்றச் சூழல் உள்ளது.
பூமியின் வட பாதியிலுள்ள ஆர்டிக் பகுதியிலிருந்தும், மத்திய மேற்காசிய நாடுகளிலிருந்தும் பறவைகள் பூமியின் தென்பகுதியில் உள்ள வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும் போது குமரி உப்பளங்களில் வந்து தங்கி ஓய்வெடுக்கிறன.
நெடுந்தூர பயணத்திற்கான சக்தியை சேமித்து விட்டு வேனிற்காலம் தொடங்கியதும் அதன், அதன் பிறப்பிடமான ஆர்டிக் பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றன.
இதில் அதிக எண்ணிக்கையில் ஆலாக்கள்(10 இனங்கள்) வருகை புரிகின்றன.இதில் மூன்று வகையான ஆலாக்கள் பல்லாயிர கணக்கில் வருகின்றன.இதை கடந்த 30_ஆண்டுகளாக மும்பை நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
வெளிநாட்டு பறவைகள் வலசை வருவதால் கீழ மணக்குடி, புத்தளம், சுசீந்திரம்,தேரூர் நீர் நிலை பகுதிகளை தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட சரணாலய பகுதிகளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“