By: WebDesk
Updated: July 7, 2018, 10:08:51 AM
தமிழகத்தில் ஏற்படும் மணல் தட்டுப்பாட்டை குறைக்க அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படுகிறது.தனியார் நிறுவனத்துடன் விரைவில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்காக தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 12 ,000 லோடு முதல் 40,000 லோடு வரை மணல் தேவைப்படுவதாக கட்டுமானத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது வழங்கப்படும் மணல் போதுமானதாக இல்லை என்றும் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெளிநாட்டு மணலை, தனியார் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்து 2018 டிசம்பரில் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து 30 லட்சம் டன் வெளிநாட்டு மணலை தனியார் மூலம் இறக்குமதி செய்ய அரசு டெண்டர் கோரியது. அதற்கு விண்ணப்பித்த 3 நிறுவனங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம் தேர்வாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனத்துடன் விரைவில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் மாதம் தோறும் 5 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்படும் நிலையில், 6 மாதங்களுக்கு ரூ. 500 கோடிக்கு 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மழைக்காலத்தில் வரும் மணல் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தரமாக இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Foreign sand is to be sold in tn from next month