கோவை மாவட்டம், வால்பாறை அருகே சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை, வனத்துறையினரின் கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோன் - மோனிகா தேவி தம்பதியினர், தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்களின் மூத்த மகள், வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர்க் குழாய் அருகே நின்று கொண்டிருந்தபோது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிறுமியின் கழுத்தில் கடித்து இழுத்துச் சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுது நேரத்தில் சிறுமி அணிந்திருந்த உடை இரத்தக் கறையுடன் தேயிலைத் தோட்டப் பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மறுநாள் காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. இரு மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது. தேயிலைத் தோட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் மகள் அப்சரா (6) என்ற சிறுமியும் சிறுத்தை தாக்கி உயிரிழந்திருந்தார். ஒன்பது மாதங்களுக்குள் இரண்டு சிறுமிகளை சிறுத்தை தாக்கி கொன்றதால், மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், சிறுமியைத் தாக்கி கொன்ற சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினர். அத்துடன், சிறுத்தையைப் பிடிக்க இரண்டு கூண்டுகளையும் வைத்தனர். இன்று, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று வனத்துறையினர் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.