தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த மாதம், இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், அதை மீட்கச் சென்ற வனத்துறையினரைத் தாக்கிவிட்டு அந்த சிறுத்தை தப்பிச் சென்றது.
இதையடுத்து, மறுநாள் அதே தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. சிறுத்தை உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ஒருவரையும் ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் தலைமையில் தி.மு.க-வினர் தேனி மாவட்ட வன அலுவலர் சம்ருதாவிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத், எம்.பி-யாக இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அனுமதி கேட்டு மக்களவை சபாநாயகரிடம் வனத்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். விசாரனைக்கு பின் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் வனத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தின் மின் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"