கோவை அடுத்த தடாகம் அருகே தாயை இழந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதை யானை கூட்டத்துடன் சேர்க்க முடியாததால் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவையை அடுத்த தடாகம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள விளை நிலத்தில் ஒரு மாதமே ஆன குட்டி யானை கடந்த வாரம் மீட்கப்பட்டது.
அந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அப்போது குட்டியின் தாய் யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்டி யானையை யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர். ஆனால், அந்த யானைகள் கூட்டம் குட்டி யானையை சேர்த்துக் கொள்ளவில்லை.
இதற்காக குட்டி யானையை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று வனத் துறையினர் யானை கூட்டத்துடன் சேர்க்க பலமுறை முயன்றனர். ஆனால் யானைகள் கூட்டம் குட்டி யானையை சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், இன்று காலை 05:30 மணி முதல் குட்டி யானையை யானை கூட்டத்துடன் சேர்க்க மீண்டும் வனப் பணியாளர்களால் முயற்சி செய்தும் யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முடியவில்லை.
கடந்த ஆறு நாட்களாக குட்டியானையை வேறு ஏதேனும் யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தும், குட்டி யானை, மற்ற யானை கூட்டத்துடன் சேரவில்லை என்பதால் குட்டி யானையின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முதன்மை வன உயிரின காப்பாளரின் உத்தரவின் படி முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“