மத்திய அரசு, வேளாண் காடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் (ஐ.எப்.ஜி.டி.பி.) சிறப்பு ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.
இதையும் படியுங்கள்: வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்
முன்னதாக, ஐ.எப்.ஜி.டி.பி.,யின், தாவர ஆராய்ச்சி மையம், மூலக்கூறு மரபியல் ஆய்வகம், மரபணு மாற்ற ஆய்வகம், திசு வளர்ப்பு ஆய்வகம், பழங்குடியினர் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், மத்திய அரசு வழங்கிய நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டங்களால் கிடைத்த பலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன்பின் அமைச்சர் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஐ.எப்.ஜி.டி.பி. பல்வேறு ஆராய்ச்சிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு, வேளாண் காடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடி வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் கிடைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கும், வேளாண் காடுகள் அதிகரிப்புக்கும் உதவும். உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil