நிர்வாக வசதிக்காககவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றைடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 24ம் தேதி விதி எண்.110 கீழ் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில்," முதல்வரின் அறிவிப்புக்கு இணங்கவும், அரசு முதன்மை செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையிலும், தற்போது இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து எடப்பாடி,நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை போன்ற மூன்று புதிய மாவட்டங்கள் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை போன்ற மூன்று மாவட்டங்களாக தமிழக அரசு பிரித்தது. அதற்கும், முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், செங்கல்பேட்டை (காஞ்சிபுரம்), தென்காசி (திருநெல்வேலி) ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்தது .
மயிலாடுதுரை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், கடந்த ஒரு வருடத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுகஆட்சியின் கீழ் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுரை நகராட்சி 1865 வரை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 அக்டோபரில், நாகப்பட்டினம் மாவட்டமாக உருவான பின்பு; திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுரை (தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு) நாகப்பட்டினத்தின் கீழ் வந்தன.
1997 ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர் தனியாக பிரிக்கப்பட்டது. மன்னார்குடி திருவாரூரின் கீழும், மயிலாடுதுரை நாகப்பட்டின மாவட்டத்தில் ஒரு நகரமாக செயல்பட்டு வந்தது.
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.