பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன், பெங்களூரின் புறநகரில் உள்ள அனேகல் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு வில்லாவிலிருந்து சென்னை காவல் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் மாநகர காவல் ஆணையகரத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் பரணி மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் பேரில் அமைச்சர் மணிகண்டன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாகவும், மலேசியாவில் பிஸினஸ் செய்ய தன்னுடன் சேருவதாக உறுதியளித்ததையடுத்து, அவருடன் நெருங்கி பழகியதாகவும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். மணிகண்டனின் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணங்களின் போது சாந்தினி அவருடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். சாந்தினி கர்ப்பமாக இருந்தபோது தான் சித்திரவதை செய்யப்பட்டு கருக்கலைப்பு செய்ய நிர்பந்திக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் பலாத்காரம், கருச்சிதைவு மற்றும் மோசடி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்ததால் சுமார் 10 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தலைமறைவானார்.
இதனையடுத்து மணிகண்டனை தேடிவந்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அனேகல் நகரத்திற்கு அருகிலுள்ள தம்மநாயக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது நண்பரின் வில்லாவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்ற தமிழக காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தனர்.
அதன்பின் மணிகண்டன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சைதாபேட்டையில் உள்ள 17 வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள ஒரு குவாரி உரிமையாளரின் உதவியுடன், மணிகண்டன் பெங்களூரு அருகே உள்ள வில்லாவில் எட்டு நாட்கள் தங்கியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மணிகண்டன் காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மட்டுமே அழைப்புகளைச் செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil