அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில், நடிகைகளையும் திரைத்துறையினரையும் ஆபாச அவதூறாக பேசியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய அவதூறு பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஏ.வி. ராஜு, மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு பேசியதாக ஒரு யூடியூப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், அந்த அ.தி.மு.க தலைவருக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் ஒரு சின்ன பொண்ணா ஒரு முன்னணி நடிகை வேணும்னு கேட்டார். ஒரு காமெடி நடிகர் தான் ஏற்பாடு செய்தார். அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்தார் என்று பேசியது சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரைத்துறையினர் மற்றும் நடிகைகள் குறித்தும் ஆபாச அவதூறு பேசிய ஏ.வி. ராஜுக்கு, இயக்குனர் சேரன், மன்சூர் அலிகான், விஷால், ஃபெப்சி ஆகிய நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் அப்படி பேசவில்லை என்றும், மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஏ.வி. ராஜு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏ.வி. ராஜு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “வணக்கம், சமூக வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியை எந்த இடத்திலும் சொல்லவில்லை, அந்த செய்தியை சம்பந்தப்பட்ட நபர் நபர் ஒருவர் சொன்னதாக சொன்னார், அதனால், நான் மீண்டும் அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. அது அருவறுப்பாக இருக்கிறது. இன்னொன்று, நான் அந்த அம்மாவைப் பற்றி நான் எந்த இடத்திலுமே விமர்சனத்துக்கு கொண்டு வரவில்லை. நான் மற்ற இடத்தில் பேசும்போதுகூட, இவர்கள் சம்பந்தமே இல்லை. எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சி இருந்ததே ஒழிய, நான் எந்த இடதிலேயும் திரைப்பட நடிகையயோ, மற்ற யாரையும் சொல்லவில்லை. இது தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படி என்று எனக்குத் தெரியவில்லை. திரைப்பட இயக்குனர் சேரனுக்கும், ஆர்.கே. செல்வமணிக்கும் மற்றும் திரிஷா அம்மாவுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள். ஒருவேளை, உங்களுடைய மனது புண்படும்படியாக இருந்திருந்தால், நான் சமூகவலைதளம் மூலமாக என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“