கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். பின்னர், அந்நபரின் சட்டையை சில அதிமுகவினர் கழற்றி அரை நிர்வாணமாக தெருவில் இழுத்துச்சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அரைநிர்வாணமாக்கி தாக்கப்பட்ட நரேஷ் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு இரவு 8 மணியளவில் பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்த ஜெயக்குமாரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, முறையான சட்ட விதிகளை பின்பற்ற வில்லை அவர் எந்தவித கொலை முயற்சி தாக்குதல்களில் ஈடுபடவில்லை எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் மாஜிஸ்ட்ரேட் முன்பு வாதத்தை முன்வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தி தாக்குவது போன்ற வீடியோ இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில்தான் நடைபெற்றதாகவும், அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உடனடியாக ஜாமீன் வழங்கினால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, தேவையான மருத்துவ உதவிகளையும், முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதி உத்தரவையடுத்து, ஜெயக்குமார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்தபோது திமுகவினர் தம்மை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், ஸ்ரீதர், மற்றும் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்