அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகலிலும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, சென்னை புழல் சிறையிலிருந்து இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் மீது தேர்தல் விதிமுறையை மீறி சாலை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தொழிற்சாலையை அபகரித்தாகவும் மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி, ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முதல் இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே ஜாமீன் கிடைத்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அவர், 2 வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்கிழமைதோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமார் ஜாமீன் உத்தரவை தொடர்ந்து, அவரை வரவேற்க தொண்டர்கள் சிறைச்சாலை வாசலில் குவிந்திருந்தனர்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்,கழக அமைப்பு செயலாளர் @offiofDJ அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளில் பதியப்பட்ட திமுகவின் பொய் வழக்குகள் அனைத்திலும் @aiadmkofficial நடத்திய சட்டப்போராட்டம் மூலம் இன்று ஜாமீனில் வெளிவந்தார். pic.twitter.com/Yy5Z6TmDhN
— AIADMK (@AIADMKOfficial) March 12, 2022
ஆனால், மாலை 6.30 மணி வரை ஜெயக்குமார் ஜாமீன் உத்தரவுக்கான ஆணை சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அவரை நேற்று விடுதலை செய்யவில்லை. ஏனெனில், சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது. இதன் காரணமாக, அங்கு 4 மணி நேரமாக திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் சென்றார். அவரை, இன்று காலை விடுதலை செய்யப்படுவார் என கூறியதையடுத்து, அதிகாலை முதல் தொண்டர்கள் சிறைவாசலில் குவிந்திருந்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமாரை, அவரது தொண்டர்கள் தோளில் தூக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிட்லரின் மறு உருவமாக இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றாமல் எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை பழி வாங்குவதில் குறியாக இருக்கிறார் என்றார்.
மேலும், 19 நாள்களுக்கு பிறகு ஜாமினில் இன்று விடுதலையான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். நேரில் சந்தித்துப்பேசினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.