நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தலைமை மறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று (ஜூன் 20) போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அதிமுக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகை சாந்தினி சென்னை பெசண்ட் நகரில் வசித்து வருகிறார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்கள்ல் நடித்து வருகிறார். இவர் அண்மையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததாகவும் அதனால் 3 முறை கப்பமானதாகவும் மணிகண்டனின் மிரட்டலால் கருவைக் கலைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு புகார் அளித்தார்.
சாந்தினி அளித்த புகாரை விசாரித்த சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவிகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, அதிமுக முன்னாள் இந்த வழக்கில் தன்னை கைது செய்ய போலீசார் முயற்சி செய்வதால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலமறைவானார். அவரைக் கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நடிகை சந்தினி அளித்த பாலியல் புகாரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று (ஜூன் 20) கைது செய்யப்பட்டார். மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது அதிமுக தலைமை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”