ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவருடைய ஆதரவாளர்கள் 7 பேர் மீது, ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12-ம்தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, நிலமோசடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாகவும், அங்கே அவர் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி-க்கு ரகசிய தகவல் கிடைத்ததால், சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரைக் கைது செய்ய வடமாநிலத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“